மதுரை நகைக் கடை கொள்ளை.. விடிய விடிய விசாரணை, சிசிடிவி ஆய்வுகள் - 9 தனிப்படைகள் அண்டை மாநிலங்களுக்கு விரைந்தது!

 
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை

மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிரபல 'தனிஷ்க்' நகைக் கடையில் 15 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட துணிகரச் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விடிய விடியத் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 9 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.

நேற்று அதிகாலை அரங்கேறிய இந்தக் கொள்ளைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் ஒட்டுமொத்த மதுரைக் காவல்துறையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பிற வணிக நிறுவனங்களின் சிசிடிவி பதிவுகளைக் காவல்துறையினர் விடிய விடிய முழுமையாக ஆய்வு செய்தனர். கொள்ளையர்கள் வந்து சென்ற வழித்தடம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் குறித்த முக்கியத் தடயங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தனிஷ்க்

நகைக்கடையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உள்ளூர் நிலவரங்கள் குறித்துத் துல்லியமாகத் தெரிந்த நபர்களின் உதவியின்றி இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருக்க முடியாது என்ற கோணத்தில், கடை ஊழியர்களிடம் இரவு முழுவதும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

குற்றவாளிகளை விரைவில் கூண்டோடு பிடிக்க ஏதுவாக, காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படைப் காவல்துறையினர் மதுரை மாவட்டத்தின் பல்வேறு சோதனைச் சாவடிகளிலும், சுங்கச்சாவடிகளிலும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளையர்கள் வேறு மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தனிப்படைப் போலீசார் அண்டை மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மர்ம நபர்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.