தங்க முதலீட்டில் அதிக லாபம்... சென்னையில் 15 லட்சம் மோசடி செய்த தம்பதி !

 
மோசடி மோசடி

சென்னையில் தங்க முதலீட்டில் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை வண்ணாரப்பேட்டை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு, வங்கி கடன் ஆலோசகராக இருந்த பெரம்பூரைச் சேர்ந்த சிவகுமார் அறிமுகமாகியுள்ளார். சிவகுமார் தனது மனைவி பத்மினி மற்றும் மகன் முகேஷ் ஆகியோருடன் இணைந்து, தங்கத்தில் முதலீடு செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி தினேஷ்குமாரிடம் 15 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளனர்.

முதலீடு செய்த பணத்திற்கு உரிய லாபமோ அல்லது அசலோ கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார், சிவகுமாரிடம் இது குறித்துக் கேட்டுள்ளார். ஆனால், பணத்தைத் திருப்பித் தராமல் சிவகுமார் குடும்பத்தினர் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். இது தொடர்பாகத் தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பெரம்பூரில் பதுங்கியிருந்த சிவகுமார் மற்றும் அவரது மனைவி பத்மினி ஆகியோரை மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய இவர்களது மகனிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், அவரை சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதானவர்களிடமிருந்து 4 செல்போன்கள் மற்றும் ஒரு டேப்லெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுபோன்ற ஆசை வார்த்தைகளை நம்பி பொதுமக்கள் தங்களது கடின உழைப்பில் சேர்த்த பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனப் பெருநகர காவல்துறை சார்பில் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.