சாதனை... நடிகை ரோஜாவின் மகள் அமெரிக்காவில் ‘ஹெர்மன் பி வெல்ஸ்' விருது வென்று அசத்தல் !
பிரபல நடிகையும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா, அமெரிக்காவில் மிக உயரிய விருதினைப் பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற 'இண்டியானா பல்கலைக்கழகம்' (Indiana University) ஆண்டுதோறும் கல்வியிலும், தலைமைத்துவத்திலும் சிறந்து விளங்கும் ஒரே ஒரு மாணவருக்கு மட்டுமே வழங்கக்கூடிய 'ஹெர்மன் பி வெல்ஸ்' (Herman B Wells Distinguished Senior Award) விருதிற்கு இந்த ஆண்டு அன்ஷுமாலிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1961-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, அந்தப் பல்கலைக்கழகத்தின் மிகவும் கௌரவமான விருதாகக் கருதப்படுகிறது.
கணினி அறிவியல் பயின்று வரும் அன்ஷுமாலிகா, கல்வியில் மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டவர். 'Binary Horizons' என்ற அமைப்பின் மூலம் இந்தியா, நமீபியா, நைஜீரியா போன்ற நாடுகளில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவருக்கு ஏற்கெனவே பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது பல்கலைக்கழகத்தின் மிக உயரிய விருதினை வென்றுள்ளார். இந்த விருது வழங்கும் விழாவில் ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேரில் கலந்து கொண்டு தங்கள் மகளின் சாதனையை நெகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

தனது மகளின் இந்த வரலாற்றுச் சாதனையைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ரோஜா, "கனவுகள் நனவாகின்றன! உனது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் உன்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே," எனப் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்த பலரும் அன்ஷுமாலிகாவின் இந்தச் சாதனைக்காக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திறமை இருந்தால் உலக அரங்கில் எங்கு வேண்டுமானாலும் முத்திரை பதிக்கலாம் என்பதற்கு ரோஜாவின் மகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
