தமிழகத்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ரோமானிய வர்த்தகம் - அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் வெளிவந்த வரலாற்றுச் சான்றுகள்!

 
அரிக்கமேடு அகழ்வாராய்சி

பண்டைய காலத்தில் தமிழர்களுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே மிகச் சிறந்த கடல்வழி வணிகத் தொடர்பு இருந்ததை நிரூபிக்கும் வகையில், புதுச்சேரிக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரிக்கமேடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் பல முக்கியச் சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன.

பண்டைய காலத்தில் அரிக்கமேடு ஒரு முக்கியமான சர்வதேச வர்த்தக மையமாகவும், துறைமுகப் பட்டினமாகவும் விளங்கியுள்ளது என்பதற்கு இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களே முக்கியச் சாட்சியாக விளங்குகின்றன.

இப்பகுதியில் ரோமானியர்கள் பயன்படுத்திய ஆம்போரா எனப்படும் இரு கைப்பிடி மதுபானக் குடுவைகளின் உடைந்த பகுதிகள், பிரசித்தி பெற்ற அரெட்டைன் வகை மட்பாண்டங்கள், வண்ணக் கண்ணாடிப் பொருட்கள், அழகிய விளக்குகள் மற்றும் மணிகள் ஆகியவை பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக வணிகர்கள் ரோமானியர்களுடன் நேரடி வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், உலக வர்த்தக வரைபடத்தில் பண்டைய தமிழகம் முக்கிய இடம் வகித்துள்ளது என்பதையும் இந்தத் தொல்லியல் சான்றுகள் உலகிற்கு உணர்த்துகின்றன.