அரசு பெண்கள் கல்லூரி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் படுகாயம்!

 
வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து

கர்நாடக மாநிலம் கலபுரகி நகரில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில், வகுப்பறை நடந்து கொண்டிருந்த போதே அதன் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து திடீரென இடிந்து விழுந்ததில் 5 கல்லூரி மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலபுரகி நகரில் செயல்பட்டு வரும் இந்த அரசு பெண்கள் கல்லூரியில், வழக்கம்போல வகுப்பறையில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு விரிவுரை நடத்திக் கொண்டிருந்தார். மாணவிகள் அனைவரும் பேராசிரியரின் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், எதிர்பாராத விதமாக வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது.

கல்லூரி மாணவிகள்

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் நிலை குலைந்த மாணவிகள், அலறியடித்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேற முயன்றனர். இதனால் ஒட்டுமொத்தக் கல்லூரி வளாகத்திலும் பெரும் பரபரப்பும் பதற்றமும் தொற்றிக் கொண்டது.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 மாணவிகள் உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்த உடனே சக பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவிகள்

காயமடைந்த 5 மாணவிகளும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவிகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று தற்போதைய முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு கல்லூரிக் கட்டிடங்களின் தரம் மற்றும் பராமரிப்புக் குறைபாடே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பெற்றோர்களும், மாணவர் அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள், விபத்து நடந்த வகுப்பறையை நேரில் பார்வையிட்டுப் பரிசோதனை செய்தனர். பழமையான அந்தக் கட்டிடத்தின் தரம் குறித்தும், விபத்து நேர்ந்த விதம் குறித்தும் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.