'ரூட் தல' மோதல், அடிதடி... கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது!
சென்னையில் 'ரூட் தல' விவகாரத்தில் யார் பெரியவர் என்ற தகராறில் சக மாணவர்களைத் தாக்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரைப் பெரியமேடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பெரியமேடு பகுதியில் பேருந்து வழித்தடங்களில் யார் கெத்து காட்டுவது (ரூட் தல) என்பது தொடர்பாக ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களிடையே இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் நிதீஷ்குமார் (19) மற்றும் ஹேமந்த் குமார் (17) ஆகிய இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அதே கல்லூரியைச் சேர்ந்த சரத்குமார், பிரகதீஷ் மற்றும் புவனேஸ்வரன் ஆகிய 3 மாணவர்களைப் பெரியமேடு காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பல மாணவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலுக்கான முழுமையான பின்னணி மற்றும் உண்மையான காரணங்கள் குறித்துப் பெரியமேடு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
