40 அடி உயரத்தில் அறுந்த பாதுகாப்புக் கயிறு ... சாகச விளையாட்டில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
கர்நாடக மாநிலம் விஜயபுராவைச் சேர்ந்த 24 வயதான குபேர் சுர்பூர் தனது சகோதரருடன் தண்டேலி சென்றுள்ளார். அங்குள்ள பிரபல விடுதி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கயிற்றில் தொங்கிச் செல்லும் சாகச விளையாட்டில் அவர் பங்கேற்றார். சுமார் 40 அடி உயரத்தில் நடுவானில் கயிற்றில் மிதந்தபடி அவர் உற்சாகமாகப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது இடுப்பில் கட்டப்பட்டிருந்த பாதுகாப்புப் பூட்டு திடீரென அறுந்து விழுந்தது.
பாதுகாப்புக் கயிறு அறுந்ததால் நிலைகுலைந்த இளைஞர் 40 அடி உயரத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் கீழே வீசப்பட்டார். இதைப் பார்த்த அங்கிருந்த சக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போய்க் கூச்சலிட்டனர். இந்தக் கொடூர விபத்தில் இளைஞரின் கை, கால்களில் பலத்த எலும்பு முறிவுகளும் நரம்பு மண்டலப் பாதிப்புகளும் ஏற்பட்டன. உடனடியாக மீட்கப்பட்ட அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இந்த ஆபத்தான விபத்திற்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த திடுக்கிடும் விபத்து தொடர்பான காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் உயிரைக் கேள்விக்குறியாக்கிய இந்தச் சம்பவத்தால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
