ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி காலி... சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் சரிவு - தரைமட்டமான தலால் ஸ்டிரீட்!
சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால், இந்தியப் பங்குச் சந்தை நேற்று வரலாற்றில் காணாத ஒரு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வரை துடைத்தெறியப்பட்டுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் செங்குத்தான சரிவைச் சந்தித்தன. இது கடந்த 15 மாதங்களில் இல்லாத மிக மோசமான வாராந்திரச் செயல்பாடாகப் பதிவாகியுள்ளது.

சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 1,470 புள்ளிகள் (1.93%) சரிந்து 74,563.92 என்ற அளவில் நிலைபெற்றது. நிஃப்டி 488 புள்ளிகள் (2.06%) வீழ்ச்சி அடைந்து 23,151.10 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு முந்தைய நாளின் ரூ.440 லட்சம் கோடியிலிருந்து, சுமார் ரூ.430 லட்சம் கோடியாகக் குறைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு ரூ.9.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கப் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. இது உலகச் சந்தைகள் அனைத்திலும் ஒருவித பயத்தை உருவாக்கியுள்ளது.
போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டி வர்த்தகமாகிறது. இந்தியா தனது தேவையில் 80%-க்கும் அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், இது நாட்டின் நிதிப்பற்றாக்குறையை அதிகரிக்கும் என்ற அச்சத்தால் பங்குகள் விற்கப்பட்டன.

இந்தியச் சந்தையிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை ரூ.46,167 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.
பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.45 என்ற புதிய வரலாற்றுச் சரிவைத் தொட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் டாலருக்கான தேவை அதிகரித்ததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
