‘பாட்டிலுக்கு 10 ரூபாய்.. ‘குடி’மகன்கள் அதிர்ச்சி’ - அக். முதல் டாஸ்மாக்கில் மதுபாட்டில் ரூ.10 வரை உயர வாய்ப்பு!

 
டாஸ்மாக் பாட்டில்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களின் விலை வரும் அக்டோபர் மாத முதல் வாரத்தில் இருந்து பாட்டிலுக்கு ரூ. 10 வரை அதிகரிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காலி மதுபாட்டில்களை மறுசுழற்சி செய்தல், முறையாக அகற்றுதல் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் போன்ற சுற்றுச்சூழல் சவால்களைக் கருத்தில் கொண்டு, அரசு இதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மது பாட்டில்களுக்குச் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை விதிக்கப்பட உள்ளது.

டாஸ்மாக்

இந்த புதிய நடைமுறையின்படி, மது பாட்டில் விலையுடன் கூடுதலாக ரூ. 10 சேர்த்து வசூலிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்திய காலி மது பாட்டில்களை மீண்டும் கடைகளில் ஒப்படைக்கும்போது, அந்த ரூ.10 அவர்களுக்கு முழுமையாகத் திரும்ப வழங்கப்பட உள்ளது.

மதிப்புக்கூட்டு வரிச் சட்டத் திருத்தத்தின்படி இந்தத் தீர்வை ரூ.20 வரை உயர்த்தச் சட்டத்தில் இடமிருந்தாலும், முதற்கட்டமாக ரூ.10 மட்டுமே உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக் மதுபாட்டில் பாட்டில்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு, அக்டோபர் மாத முதல் வாரத்தில் இந்த நடைமுறை முறைசார்ந்த விலை உயர்வாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அமலுக்கு வருவதன் மூலம் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.