ரூ.100 கோடி மோசடி... பீகாரில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது!
பீகார் மாநிலத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய ஏஜெண்ட் என்றும், ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மணீஷ் குப்தா என்பவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் ஜமால்பூர் பகுதியில் 'இந்திய அரசு' என்ற பெயர்ப்பலகை பொருந்திய சொகுசு வாகனத்தைப் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தனர். காரில் இருந்த மணீஷ் குப்தா, தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் 'ரகசிய ஏஜெண்ட்' என்றும் கூறி அதிகாரிகளிடம் மிதப்பாகப் பேசியுள்ளார்.
இது குறித்து சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது உறுதி செய்யப்பட்டது.
வீட்டின் வெளியே 'இந்திய அரசு' பலகையுடன் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா உள்ளிட்ட பல விலையுயர்ந்த சொகுசு கார்கள், பல்வேறு வங்கிகளின் 23 கிரெடிட் கார்டுகள், 8 டெபிட் கார்டுகள், 4 செக் புக்குகள் மற்றும் 5 ஐபோன்கள், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சட்டவிரோதமாகப் வைக்கப்பட்டிருந்த 2 கலைமான் கொம்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மக்களை அச்சுறுத்தியும், அரசுப் பணி வாங்கித் தருவதாக ஏமாற்றியும் மணீஷ் குப்தா சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோதமாகச் சேர்த்துச் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
