ரூ.100 கோடியில் 'வெற்றி 150 நாள் திட்டம்': அமைச்சர் ஆனந்த் சட்டமன்றத்தில் அறிவிப்பு!
கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் 'வெற்றி 150 நாள் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
'விபிஜி ராம்ஜி' திட்டத்தின் கீழ் ஏற்கனவே 125 நாட்கள் வேலையை நிறைவு செய்த குடும்பங்களுக்கு, மாநில அரசின் சார்பில் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கி, மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இக்கூடுதல் 25 நாட்கள் வேலை வழங்கும் 'வெற்றி 150 நாள் திட்டத்தை' செயல்படுத்துவதற்காகத் திருத்த வரவு-செலவு திட்டத்தில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
"விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் என்னென்ன பணிகள் நடைபெற வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிக்க முடியாது. மாநில அரசாகிய நாங்கள் எடுப்பதுதான் முடிவாகும். ஏழை மக்களுக்கு என்ன தேவையோ அதை இந்த அரசு நிச்சயம் செய்யும்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
125 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக மாநில அரசின் பங்காக ரூ.5,057 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே அரசின் முதன்மைப் பணி என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
