மாணவர்களுக்கு ரூ.1,000 ரொக்கம்... ஸ்கூல் பேக், ஷூ வாங்க வழங்குவதாக புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் ஷூ வாங்குவதற்காகத் தலா ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்ககம் சார்பில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மாணவர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்:
அரசுப் பள்ளி மாணவர்கள் 80 ஆயிரம் பேருக்குப் புத்தகப்பை மற்றும் ஷூ வாங்குவதற்காகத் தலா ரூ.1,000 வழங்கப்படும். இந்தத் தொகை மாணவர்களின் தாயாரின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். தேர்தல் நேரத்தில் பொருட்களை வாங்கித் தருவதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்க இந்த ரொக்கப்பரிசு முறை அமல்படுத்தப்படுகிறது.

விளையாட்டுத் துறை இனி தனித் துறையாகச் செயல்படும். பயிற்சியாளர்களின் ஊதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீரர்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலப் போட்டிகளுக்குச் செல்ல அரசே நிதி வழங்கும். இதற்காகத் தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் திடல்களை மேம்படுத்த மத்திய அரசு ரூ.200 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் இதுவரை அரசுப் பணியில் 5,000 பேருக்கும், தனியாரில் 8,000 பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிச் சீருடைகள் மற்றும் புத்தகப் பைகளை அரசிடமிருந்து எதிர்பார்க்கக் காத்திருந்த பெற்றோர்களுக்கு, இந்த ரொக்கப்பரிசு அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
