மதுரையில் ரூ.1,000 கோடி பணம் இரட்டிப்பு மோசடி - தம்பதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 'FQL' என்ற தனியார் நிதி நிறுவனம் மூலம் பணம் இரட்டிப்பு செய்வதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட கணவன் - மனைவி மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கிய 'FQL' என்ற தனியார் நிதி நிறுவனம், செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்தால் இரண்டு மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் எனப் பொதுமக்களிடம் ஆசைவார்த்தைகளைக் கூறியுள்ளது. இதற்காக முகவர்களும் நியமிக்கப்பட்டு கிராம மக்கள் குறிவைக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் சிலருக்குப் பணம் இரட்டிப்பாகக் கிடைத்ததால், நம்பகத்தன்மை ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர்.
திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வழக்கு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலூர் அருகேயுள்ள கட்டையம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய தம்பதியினர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தென் மாவட்டங்களில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ள நிலையில், சுமார் ரூ.1,000 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் பெரும் தொகையைச் சுருட்டி மோசடியில் ஈடுபட்ட ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவர் மீதும் தீவிர நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறையினர் தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் ஆணையைப் பிறப்பித்துள்ளனர்.
