"பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் ரூ.10,000 தள்ளுபடி - பதிவுக்கட்டணத்தில் 1% தள்ளுபடி!
தமிழகத்தில் பெண்கள் பெயரில் சொத்துகளைப் பதிவு செய்யும் போது, அவர்களுக்குப் பெரும் நிதிச் சலுகையை வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பெண்கள் பெயரில் சொத்து வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
பொதுவாகச் சொத்து பரிமாற்றத்தின் போது முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கப்படும் போது, சொத்தின் மொத்த வழிகாட்டி மதிப்பில்1 சதவீதம் வரை பதிவுக்கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு சொத்தின் மதிப்பு ₹10 லட்சம் என்றால், பதிவுக்கட்டணத்தில் ₹10,000 வரை சேமிக்க முடியும். சொத்து மதிப்பு கூடக் கூட இந்தச் சேமிப்புத் தொகையும் அதிகரிக்கும்.

இந்தச் சலுகையைப் பெறுவதற்குச் சில முக்கியமான விதிகள் உள்ளன. சொத்து முழுவதும் அந்தப் பெண்ணின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். கூட்டுப் பெயர் கூடாது. ஒருவேளை கணவன் அல்லது சகோதரன் போன்ற ஆண்களுடன் சேர்ந்து கூட்டுப் பெயரில் சொத்து வாங்கப்பட்டால், இந்த 1% தள்ளுபடிச் சலுகை கிடைக்காது. புதிய வீடு, காலி மனை அல்லது விவசாய நிலங்கள் என எந்த வகையான சொத்துகளையும் பெண்கள் பெயரில் வாங்கும்போது இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குடும்பச் சொத்துகளில் பெண்களுக்குச் சம உரிமை கிடைக்கச் செய்வதுடன், அவர்கள் பெயரில் சொத்துக்கள் சேருவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பெண்களுக்குச் சமூக அந்தஸ்தும், நிதி ரீதியான பாதுகாப்பும் கிடைக்கிறது.
