கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 நிதியுதவி... பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?!
இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்கள், பிரசவத்திற்குப் பிறகான பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு ‘பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ என்ற மக்கள் நலத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள தாய்மார்களுக்கு இரண்டு பிரசவங்களின் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.11,000 வரை நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டம் மேலும் எளிமைப்படுத்தப்பட்டு, நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் புதிய விதிமுறைகளின்படி, ஒரு பெண்ணின் முதல் குழந்தை பிறப்பின் போது இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. அதேபோல், இரண்டாவது பிரசவத்தில் பிறப்பது பெண் குழந்தையாக இருந்தால், பெண் சிசுக் கொலையைத் தடுத்து பாலின விகிதத்தை உயர்த்தும் உன்னத நோக்கில் ஒரே தவணையாக ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறப் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, கணவரின் ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்பாராத விதமாகக் கருச்சிதைவு அல்லது இறந்த குழந்தை பிறந்தால், அவர்கள் அடுத்த பிரசவத்தின் போது புதிய பயனாளியாகக் கருதப்பட்டு மீண்டும் நிதியுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் சாமானியக் கர்ப்பிணிப் பெண்கள், தங்களின் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள் அல்லது அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களை அணுகி தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பொதுமக்கள் தங்களின் மொபைல் போன் மூலமாகவே pmmvy.wcd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பிரத்தியேக 'PMMVY App' செயலியைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்த பின் விண்ணப்பத்தின் நிலை மற்றும் பணப் பரிவர்த்தனை குறித்த விவரங்களை உடனுக்குடன் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
