15 வருடங்களாக குடும்பத்தினருக்குத் தெரியாமல் லாட்டரி வாங்கிய லாரி டிரைவருக்கு ரூ.12 கோடி பம்பர் பரிசு!
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாக லாட்டரி சீட்டு வாங்கி வந்த சாதாரண டிப்பர் லாரி டிரைவர் ஒருவருக்கு, தற்போது ரூ.500 லாட்டரி சீட்டில் ரூ.12 கோடி முதல் பரிசு அடித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசின் 'தீபாவளி பம்பர் 2026' லாட்டரி குலுக்கலில் அடித்த இந்த அதிர்ஷ்டத்தால் அவரது கிராமமே இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் தேரா பஸ்ஸி பகுதியில் உள்ள ஹம்யூன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பல்ஜிந்தர் சிங் (வயது 45). டிப்பர் லாரி டிரைவராகப் பணியாற்றி வரும் இவர், ஓய்வு நேரங்களில் சிறிய அளவில் விவசாயமும் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பல்ஜிந்தர் சிங் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பண்டிகைக் காலங்களில் தவறாமல் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். வீட்டில் தேவையற்ற கவலையோ விவாதமோ ஏற்படக் கூடாது என்பதற்காக, லாட்டரி வாங்கும் பழக்கத்தைத் தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் 15 ஆண்டுகளாக ரகசியமாகவே வைத்திருந்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பஞ்சாப் மாநில அரசு சார்பில் நடத்தப்பட்ட ‘தீபாவளி பம்பர் 2026’ லாட்டரி குலுக்கலுக்காக, மொஹாலி மாவட்டம் ஜிராக்பூரில் உள்ள லாட்டரி விற்பனை நிலையத்தில் ரூ.500 கொடுத்து பல்ஜிந்தர் சிங் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் 16-ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, பல்ஜிந்தர் சிங் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி முதல் பரிசு விழுந்திருப்பது தெரியவந்தது. முதலில் இதனை நம்ப முடியாமல் திகைத்த அவர், பின்னர் உறுதி செய்ததும் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

சாதாரண லாரி டிரைவராக உழைத்து வந்த தனக்குக் கிடைத்துள்ள ரூ.12 கோடி பரிசுத் தொகையில் பெரும் பகுதியை, தனது இரண்டு குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் எதிர்கால நலனுக்காகச் செலவிடப் போவதாக பல்ஜிந்தர் சிங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பல்ஜிந்தர் சிங்கிற்கு ரூ.12 கோடி பரிசு விழுந்த தகவல் ஹம்யூன்பூர் கிராமம் முழுவதும் வேகமாகப் பரவியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டிற்குத் திரண்டு வந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், கிராமம் முழுவதும் இனிப்புகள் வழங்கி இந்தப் பெரிய வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
