ரூ.1.3 கோடி சைபர் மோசடி.. சென்னை போலீஸ் கமிஷனர் அவசர ஆலோசனை!
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வங்கிக்கணக்கை முடக்கி ரூ.1.3 கோடி நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சைபர் குற்றங்களைத் தடுப்பது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சமீப காலமாகச் சைபர் குற்றவாளிகளின் கொள்ளை அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றின் வங்கிக்கணக்கை மர்ம நபர்கள் முடக்கி, அதிலிருந்த ரூ.1.3 கோடி பணத்தைக் கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்துள்ளனர். அபகரிக்கப்பட்ட அந்தப் பணத்தை 24 வெவ்வேறு வங்கிக்கணக்குகள் மூலமாகப் பரிமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்துச் சென்னை மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக்கணக்கிலிருந்தும் ரூ.22 கோடியை சைபர் குற்றவாளிகள் நூதன முறையில் அபகரித்திருந்தனர். இவ்வழக்கில் அதிரடி நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசார் 7 பேரைக் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து ரூ.39 லட்சத்தையும் மீட்டனர். இருப்பினும், கைதானவர்கள் கமிஷனுக்காகத் தங்கள் வங்கிக்கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்தவர்கள் மட்டுமே என்பதால், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் முக்கியக் குற்றவாளிகளைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வங்கிக்கணக்குகளில் இருந்து நேரடியாகப் பணத்தைக் கொள்ளையடிக்கும் இத்தகைய சம்பவங்கள் காவல்துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், இதனைத் தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் முதன்மை பொதுமேலாளர் அனிதா பட்நாயக், பொதுமேலாளர் சதீஷ்குமார் மற்றும் துணை பொதுமேலாளர் சுதாகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சைபர் குற்றவாளிகள் வங்கிக்கணக்குகளைப் பயன்படுத்தி பணம் பறிப்பதைத் தடுப்பது குறித்தும், வங்கிக்கணக்குகளின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வங்கிகளோடு இணைந்து சைபர் குற்றங்களை ஒடுக்க உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
