புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ரூ.14,300 கோடி... மத்திய அரசு ஒப்புதல்!

 
புதுச்சேரி சட்டப்பேரவை புதுவை

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான ரூ.14,300 கோடி மதிப்பிலான முழுமையான பட்ஜெட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதுவையின் நிதி ஆரோக்கியம் குறித்த மத்திய நிதி அமைச்சகத்தின் சந்தேகங்களுக்கு மாநில அரசு அளித்த விரிவான விளக்கங்களைத் தொடர்ந்து இந்த அனுமதி கிடைத்துள்ளது.

புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், 2026-27 நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட்டை அப்போது தாக்கல் செய்ய இயலவில்லை. தேர்தல் காலச் செலவினங்களை எதிர்கொள்ளும் பொருட்டு, கடந்த 15-வது சட்டசபையில் நிதிப் பொறுப்பு வகித்த முதலமைச்சர் ந.ரங்கசாமி, 5 மாதங்களுக்காக (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இடைக்கால பட்ஜெட்டின் காலக்கெடு அடுத்த மாதத்துடன் (ஆகஸ்ட்) முடிவடைவதையொட்டி, முழுமையான பட்ஜெட்டை இறுதி செய்யக் கடந்த சூன் 5-ஆம் தேதி ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் (கைலாஷ்நாதன்) மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இறுதி செய்யப்பட்ட ரூ.14,300 கோடி பட்ஜெட் கோப்பு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

எனினும், புதுச்சேரியின் ஒட்டுமொத்தக் கடன் சுமை குறித்து மத்திய நிதி அமைச்சகம் சில விளக்கங்களைக் கோரியிருந்தது. அதற்குப் புதுச்சேரி அரசு அனுப்பிய விரிவான புள்ளிவிபர அறிக்கையின்படி,  கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, புதுச்சேரியின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் ரூ.11,876.38 கோடியாக உள்ளது. இதில் 84.89% (ரூ.10,083.86 கோடி) ரிசர்வ் வங்கி மூலம் பெறப்பட்ட சந்தைக் கடன்கள், நபார்டு மற்றும் பொதுக் கணக்கு கடன்கள் ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளில் (2021-22 முதல் 2025-26 வரை) அனுமதிக்கப்பட்ட மொத்த கடன் வரம்பு ரூ.9,449.49 கோடியாக இருந்த போதிலும், புதுவை அரசு வெறும் ரூ.7,522.92 கோடியை மட்டுமே கடனாகப் பெற்றுள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன், புதுவையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21.19 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது மத்திய அரசு பரிந்துரைத்துள்ள 25% கடன் வரம்பிற்குள் மிகக் குறைவாக இருப்பதால், புதுச்சேரியின் நிதிநிலை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசின் முறையான நிதி மேலாண்மை விளக்கங்களால் திருப்தியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், பட்ஜெட்டிற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதத்தை புதுவை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசின் பச்சைக்கொடி காட்டப்பட்டதைத் தொடர்ந்து, 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் இந்த சூலை மாத இறுதிக்குள் கூட வாய்ப்புகள் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, தற்போதைய புதிய சட்டமன்றத்தின் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.