காதலிப்பதாக ஏமாற்றி ரூ.15 லட்சம் மோசடி... திருவாரூரில் பெண் காவலரும், அவரது தாயாரும் கைது!
திருவாரூர் அருகே காதலிப்பதாக ஏமாற்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்த இளைஞரிடம் பல லட்ச ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு திருமணம் செய்ய மறுத்த பெண் காவலர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (36) வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் அகர திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கோவை பட்டாலியன் சி பிரிவைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் பெண் காவலர் செமிலா (29) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

செமிலாவைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரது தாய் சசிகலா (46), காதலன் ராஜமாணிக்கத்திடம் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.15,37,000 பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கூறியபடி திருமணம் செய்து வைக்காமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ராஜமாணிக்கம் அளித்த புகாரின் பேரில், திருவாரூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து, பெண் காவலர் செமிலா, அவரது தாய் சசிகலா மற்றும் சகோதரர் கோகுல்ராஜ் (23) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
இவர்களில் பெண் காவலர் செமிலா மட்டும் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும், சசிகலா திருவாரூர் மகளிர் கிளைச் சிறையிலும், கோகுல்ராஜ் நாகை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
