ரூ.1,500 கோடி மோசடி... சுவாமி நித்யசைதன்யா, லதா பாலியல் வழக்கில் விசாரணை தீவிரம்!

 
சுவாமி நித்யசைதன்யா

கிளிரூர்-கவியூர் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட லதா நாயர் தொடர்புடைய நிதி மோசடி விவகாரத்தில், 'சுவாமி நித்யசைதன்யா' என்று அழைக்கப்படும் அனில் குமார் (55) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து, அவரது நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரையைச் சேர்ந்த அனில் குமார், ஆரம்பத்தில் அரசியல் செயற்பாட்டாளராக இருந்து நிதி முறைகேடுகளால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். அதன் பின்னர் 'சுவாமி நித்யசைதன்யா' என சந்நியாசி வேடமிட்டு, தமிழ்நாட்டின் தென்காசியில் 'ஸ்ரீ ஸ்ரீ தட்சிணாமூகாம்பிகா கல்வி நல மற்றும் கலாச்சார அறக்கட்டளை' என்ற அமைப்பை நிறுவியுள்ளார். 

இந்த அறக்கட்டளைக்கு மத்திய அரசின் அனுமதி மூலம் ரூ.1,500 கோடி சி.எஸ்.ஆர் நிதி வரவுள்ளதாகக் கூறி, மத்திய அரசு அனுமதி பெறப் பணம் தேவை எனக் கூறி முதலீட்டாளர்களை நம்ப வைத்துள்ளார். மேலும் சி.எஸ்.ஆர் நிதி வந்தவுடன் முதலீடு செய்யும் தொகைக்கு 5 மடங்கு கூடுதல் லாபம் தருவதாக உறுதியளித்து கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து, அந்தப் பணத்தை அறக்கட்டளை கணக்கிற்கு மாற்றியுள்ளார். 25 லட்சம் ரூபாயை இழந்த முதலீட்டாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த மாபெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

காக்கநாட்டில் உள்ள உறைந்த உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.37 லட்சம் மோசடி செய்த வழக்கில், அனில் குமாரைத் திருக்காக்கரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இவ்வழக்கில் லதா நாயர் 'இந்து' என்ற புனைப்பெயரில் செயல்பட்டு வந்துள்ளார். மேலும், இந்த சதித்திட்டத்தின் முக்கிய சூத்திரதாரியான மலப்புரத்தைச் சேர்ந்த எஸ். சுனில் குமார் (48) மற்றும் சிராயின்கீழைச் சேர்ந்த சிந்து திலீப் குமார் (52) ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அனில் குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்து வருகிறது.