₹15,037 கோடியில் நெல்லையில் சோலார் உற்பத்தி ஆலை.. முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் முன்னணி நிறுவனமான விக்ரம் சோலார், அதிநவீன மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் சோலார் தயாரிப்புகளுக்கான பிரம்மாண்ட ஆலையை நெல்லையில் நிறுவ முன்வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.15,037 கோடி அளவுக்குப் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தென் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக, இந்த ஒரே ஒரு தொழிற்திட்டம் மூலம் மட்டும் சுமார் 2,670 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாக உருவாக்கப்பட உள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்த நிகழ்வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தொழில் துறை அதிகாரிகள், விக்ரம் சோலார் நிறுவனத்தின் முக்கிய உயர்மட்ட நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
வழக்கமாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளிலேயே குவிந்து வரும் பெருந்தொழில் முதலீடுகளை, தென் தமிழகத்தை நோக்கித் திசைதிருப்பும் தவெக அரசின் முக்கிய நகர்வாக இந்த முதலீடு பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி விஎஸ்ஐ எலக்ட்ரிக் வாகன ஆலை முதலீட்டைத் தொடர்ந்து, தற்பொழுது நெல்லையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் இந்த ₹15,037 கோடி முதலீடு தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் எனத் தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
