டெல்லியில் துப்பாக்கி முனையில் ரூ.17 லட்சம் கொள்ளை... ஹெல்மெட் கொள்ளையர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு!

 
துப்பாக்கி கொள்ளை

டெல்லியில் உள்ள மிக பிஸியான காந்தி நகர் சந்தை பகுதியில், பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூபாய் 17 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், வழக்கம் போல நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைக்காக ரூபாய் 17 லட்சம் ரொக்கப் பணத்தைப் பையில் எடுத்துக்கொண்டு சந்தை வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த இரு மர்ம நபர்கள், அந்த ஊழியரை வழிமறித்தனர்.

ஹெல்மெட் அணிந்திருந்த கொள்ளையர்கள், தங்களது கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி அந்த ஊழியரைச் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். துப்பாக்கியைக் கண்டதும் நிலைகுலைந்த ஊழியரிடமிருந்து, ரூபாய் 17 லட்சம் பணம் இருந்த பையைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்டனர்.

சத்தம் கேட்டுப் பொதுமக்கள் கூடுவதற்குள், தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி கொள்ளையர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்தத் துணிகர வழிப்பறி குறித்து டெல்லி காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள், பாதிக்கப்பட்ட ஊழியரிடமும் அங்கிருந்த வியாபாரிகளிடமும் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

காந்தி நகர் சந்தை வீதிகளில் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் தற்பொழுது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு வணிகப் பகுதியில், பகல் நேரத்தில் துப்பாக்கியைக் காட்டி இந்தத் துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளதால், குற்றவாளிகளைப் பிடிக்கப் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.