"ரூ.2 லட்சம் நிவாரணம் போதாது; ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்குக!" - பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!

 
பிரேமலதா விஜயகாந்த்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேர்ந்த கொடூர அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள நிதியுதவி போதுமானதாக இல்லை என்றும், அதனை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

வாழ்வாதாரம் தேடித் தமிழகம் வந்து, இந்த இறால் பதப்படுத்தும் ஆலையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள் நச்சு வாயுவைத் சுவாசித்து உயிரிழந்த சம்பவம் ஆழாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்திருப்பது தற்போதைய பொருளாதாரச் சூழலில் மிகக் குறைவான தொகையாகும்.

உயிரிழந்த ஏழைத் தொழிலாளர்களின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் இந்தத் தொகையை தலா ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கத் தற்போதைய தவெக அரசு முன்வர வேண்டும்.

"இவ்விபத்தில் உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளர்களின் உடல்களையும், நச்சு வாயுத் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கடுமையான அச்சத்தில் இருக்கும் மற்ற தொழிலாளர்களையும் எவ்விதத் தொய்வுமின்றிப் பாதுகாப்புடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசுச் செலவில் அனுப்பி வைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் முழுப் பொறுப்போடு எடுக்க வேண்டும்" எனப் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.