ரூ.200 கோடி பணமோசடி... நடிகை நோரா ஃப்தேஹி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம்!

 
நோரா

தொழிலதிபர் போர்வையில் பலரிடமும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக பணமோசடி செய்ததாகக் கைதான சுகேஷ் சந்திரசேகர் தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி சாட்சியமளிக்க நேரில் ஆஜரானார்.

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீது அமலாக்கத்துறை  மற்றும் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு ஆகியவை நிதி மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி, டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

நோரா பதேஹி

அதேவேளையில், இந்த வழக்கில் நோரா ஃபதேஹி மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்றும், அவர் முற்றிலும் குற்றமற்றவர் என்றும் அவரது வழக்கறிஞர்கள் குழு தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றத்திற்குத் தேவையான சாட்சியங்களை வழங்குவதற்காக மட்டுமே அரசுத் தரப்பு சாட்சியாக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ரோஹிணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகேஷ் சந்திரசேகர், உயர்மட்ட அரசு அதிகாரிகள் போலப் பேசித் தொழில் அதிபர்களின் மனைவிகளிடம் ரூ.200 கோடிக்கு மேல் மிரட்டிப் பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இப்பணத்தில் பாலிவுட் நடிகைகளான ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலருக்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள், வைர நகைகள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

சுகேஷ்

சுகேஷின் மனைவியின் மூலமாகவே தனக்கு அறிமுகம் கிடைத்ததாகவும், தமக்குச் சுகேஷுடன் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை என்றும் நோரா ஃபதேஹி விசாரணையில் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது நோரா ஃபதேஹி அளித்த சாட்சியத்தைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.