ரூ.200 கோடி முறைகேடு... மதுரையில் திமுக நிர்வாகியின் கணவர் கைது!

 
மதுரை திமுக 200 கோடி முறைகேடு

மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.200 கோடி அளவிற்கு நடைபெற்ற பிரம்மாண்ட வரிவிதிப்பு முறைகேடு விவகாரம் தொடர்பாக, மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவரின் கணவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்பதால் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்கள் எனச் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்குக் கட்டட வரி மற்றும் சொத்து வரி நிர்ணயம் செய்ததில் மிகப்பெரிய அளவில் கையாடல் நடைபெற்றுள்ளது. கடந்த 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகளின் ரகசியக் கணினி பாஸ்வேர்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, வரித் தொகையைக் குறைத்துக் காட்டி சுமார் ரூ.200 கோடி வரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தீவிர ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, 5 மண்டலங்களின் தலைவர்கள் மற்றும் 2 நிலைக்குழுத் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

மதுரை

இவ்விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமையில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி மற்றும் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், வரிவிதிப்புக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உட்பட மாநகராட்சி உதவி கமிஷனர்கள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் எனச் சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சில காலம் அமைதியாக இருந்த வழக்கு விசாரணை, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையிலான அதிமுக கவுன்சிலர்கள் டிஐஜியிடம் மீண்டும் புகார் அளித்ததைத் தொடர்ந்து மீண்டும் வேகம் எடுத்தது.

இதனையடுத்து, நேற்று அதிகாலையில் மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல முன்னாள் தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனை அவரது இல்லத்தில் வைத்துப் பிடித்த காவல்துறையினர், மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சரவணன் முறைப்படி கைது செய்யப்பட்டார்.

மதுரை

அதே நேரத்தில், முன்னாள் தெற்கு மண்டலத் தலைவர் முகேஷ்குமார், முன்னாள் மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர் மிசா பாண்டியன் மற்றும் மேற்கு மண்டலத் தலைவரின் கணவர் விமல் ஆகியோரின் வீடுகளுக்கும் காவல்துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால், அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களைத் தேடும் பணி முடுக்கப்பட்டுள்ளது.

சரவணன் கைது செய்யப்பட்டதற்கு திமுகவினர் காவல் நிலையம் முன்பாகத் திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அடுத்தடுத்து மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.