ரூ.2.16 கோடி பறிமுதல், 19 அரசு அதிகாரிகள் கைது - தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

 
ரெய்டு லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடிச் சோதனைகளில் கணக்கில் வராத மற்றும் சந்தேகத்திற்குரிய தொகையாக ரூ.2.16 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 19 அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 செப்டம்பர் 1 முதல் 30 வரையிலான காலக்கட்டத்தில், பல்வேறு அரசுப் பணிகளுக்காக ரூ.1,500 முதல் ரூ.7,00,000 வரை லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அதிகாரி, உதவிப் பொறியாளர், வணிக வரி உதவி ஆணையர், மின்வாரியக் கள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 19 அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை பொறிவைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளது.

திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் உள்ள பல அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூ.13.78 லட்சமும், ஜி-பே மூலமாக மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1.59 கோடியும் கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

சார் பதிவாளர் அலுவலகம், மின்சார வாரியம் மற்றும் வக்ஃப் வாரிய அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரொக்கமாக ரூ.3.94 லட்சமும், ஜி-பே பரிவர்த்தனை மூலம் ரூ.28.12 லட்சமும் என மொத்தம் ரூ.32.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரெய்டு லஞ்ச லஞ்சம் ஒழிப்புத்துறை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள SDS அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இதே காலகட்டத்தில், லஞ்ச வழக்குகளில் வேலூர் மற்றும் விருதுநகர் நீதிமன்றங்கள் இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்குக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு 2 முதல் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளன.