பெண்களுக்கு மாதம் ரூ.2,500.. சட்டசபையில் இன்று அறிவிக்க வாய்ப்பு!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52-ஆவது பிறந்தநாளான இன்று தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பெண்களுக்குக் குடும்பத் தலைவி ஊக்கத்தொகையாக மாதம் 2,500 ரூபாய் வழங்கும் புதிய வரலாற்றுத் திட்டத்தை அவர் அறிவிக்க உள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முக்கியச் சட்டசபைக் கூட்டத்தொடர் இதுவாகும். தமிழகத்தில் தற்பொழுது பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றி, முதலமைச்சரின் பிறந்தநாளான இன்று முதல் "மதிப்புமிகு மகளிர் திட்டம்" என்ற புதிய பெயரில் அதனைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித்தொகையான 1,000 ரூபாயை, 2,500 ரூபாயாக அசுர அளவில் உயர்த்தி வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், ஏழை எளிய குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக இன்று சட்டசபையிலேயே 110 விதியின் கீழ் வெளியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தலைமைச் செயலக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.
இன்று தட்டசபையில் இந்த 2,500 ரூபாய் வழங்கும் "மதிப்புமிகு மகளிர் திட்டம்" அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், அது தமிழகப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
