முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு - மீண்டும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சரும், அண்மையில் திமுகவில் இணைந்தவருமான ஆர்.வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கை மீண்டும் விரிவாக விசாரிக்கத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் ஐபிஎஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி மாத இறுதியில் முடிக்கப்பட்ட இந்த வழக்கு, தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மீண்டும் கையில் எடுக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், ஆர்.வைத்திலிங்கம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். அப்போது சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்ட அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.
இந்தத் திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்குவதற்காக, அந்த நிறுவனத்திடமிருந்து தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான 'முத்தம்மாள் எஸ்டேட்ஸ்' என்ற போலி நிறுவனம் மூலம் பல்வேறு தவணைகளாக ரூ.27.90 கோடி லஞ்சமாகப் பெற்றதாக வைத்திலிங்கம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2024 செப்டம்பர் 19 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் முதன்மை வழக்கைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ்ப் மத்திய அமலாக்கத்துறையும் வைத்திலிங்கம் மீது தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த விசாரணையில் லஞ்சப் பணம் கைமாறியதற்கான டிஜிட்டல் மற்றும் வங்கிப் பரிமாற்ற ஆதாரங்களை உறுதி செய்த அமலாக்கத்துறை, வைத்திலிங்கத்தின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.100 கோடிக்கும் அதிமான சொத்துக்களை முடக்கியதுடன், 2025 ஜூலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி, அப்போதைய ஆளும்கட்சியான திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவர் கட்சியில் இணைந்த சில வாரங்களிலேயே, பிப்ரவரி கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த லஞ்ச வழக்கை முடித்து வைப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
மாநில அரசின் இந்தத் துரிதமான வழக்கு முடிப்பு நடவடிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, "முறையான மற்றும் முழுமையான ஆதாரங்கள் இருக்கும் ஒரு வழக்கை, அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக முடித்து வைப்பது சட்டவிரோதமானது" எனக் கூறி நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்தது.
அமலாக்கத்துறையின் இந்த எதிர்ப்பு மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை தங்களின் முந்தைய முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.
வழக்கு முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தில் எழுந்த கடுமையான பொதுவிமர்சனங்கள் மற்றும் சட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, வைத்திலிங்கம் மீதான இந்த லஞ்சப் புகாரை மீண்டும் முழுமையாகத் தொடக்கத்திலிருந்து மறுவிசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இந்த மறுவிசாரணை குறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை லஞ்ச ஒழிப்புத்துறை முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த ஊழல் வழக்கு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
