குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000... அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
நாடு முழுவதும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வலியுறுத்தப்படும் என்று இன்று வெளியிடப்பட்டுள்ள அதிமுகவின் தேர்தல் அறிக்கை வைரலாகி வருகிறது.
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 133 அம்சங்கள் அடங்கிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வலியுறுத்தப்படும் எனவும் உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ வலியுறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000, நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழத் தமிழர்களை இணைப்பது உள்ளிட்ட 133 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தனித்து 33 இடங்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.