தவெக MLA-விடம் ரூ.35 கோடி குதிரை பேரம்.. .பிரபல பைனான்ஸ் அலுவலகத்திற்குப் போலீசார் சீல்!

 
குதிரை பேரம் சீல்

தவெக சட்டமன்ற உறுப்பினரைக் குதிரை பேரம் பேசி மிரட்டிய விவகாரத்தில், கரூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல நிதி நிறுவனத்தில் நள்ளிரவு முழுவதும் சோதனை நடத்திய காவல் துறையினர், இன்று காலை அந்த அலுவலகத்திற்கு அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர். அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள இந்த வழக்கில், அடுத்தடுத்துப் பாயும் அதிரடி நடவடிக்கைகள் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவை, சென்னையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் 35 கோடி ரூபாய் தருவதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டியுள்ளார். அதற்கு எம்.எல்.ஏ இளையராஜா உடனடியாக மறுப்புத் தெரிவிக்கவே, அவருக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தவெக பேரம் செந்தில்பாலாஜி

இது குறித்து எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் இதுவரை 12 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய ரகசிய விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே தவெக எம்.எல்.ஏ-விடம் இந்த இமாலயக் குதிரை பேரம் நடத்தப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவலைக் கைதானவர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளனர்.

சீல்

இதனைத் தொடர்ந்து, இந்தச் சதித் திட்டத்திற்குப் பணப் பரிவர்த்தனை எங்கிருந்து திட்டமிடப்பட்டது என்பது குறித்த விசாரணையில் கரூர் லிங்க் வெளிப்பட்டது. கரூரின் சின்ன ஆண்டான் கோவில் சாலையில் அமைந்துள்ள கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் கரூர் போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

விடிய விடிய நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவில், குதிரை பேரம் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான மிக முக்கியமான ஆவணங்கள், லேப்டாப் மற்றும் டைரிகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை அந்தப் பைனான்ஸ் அலுவலகத்திற்குப் போலீசார் முறைப்படி சீல் வைத்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் நிதியுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.