திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3.89 கோடி காணிக்கை... கோடை விடுமுறையில் குவியும் பக்தர்கள்!
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி, உண்டியல் காணிக்கை மற்றும் பக்தர்களின் வருகை குறித்த மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
ஒரே நாளில் சுமார் 73,324 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் காணிக்கை மூலம் மட்டும் அன்று ஒருநாளில் ரூ.3.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சுமார் 22,955 பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகத் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டுத் தமிழகம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யச் சுமார் 15 முதல் 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

பக்தர்களின் வசதிக்காக வரிசையில் காத்திருக்கும் இடங்களில் குடிநீர், மோர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் தங்குதடையின்றி வழங்கத் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், வெயிலின் தாக்கத்தைக் குறைக்க மாட வீதிகளில் குளிர்ச்சியான தரை விரிப்புகள் விரிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
