ரூ.40 லட்சம் முன்பண மோசடி வழக்கு... நடிகர் ராஜ்கிரண் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

 
ராஜ்கிரண்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குநருமான ராஜ்கிரண், திரைப்படத்துக்காக வாங்கிய முன்பணத்தைத் திருப்பித் தராதது தொடர்பான வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மீஞ்சூரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சரவணன் என்பவர், கடந்த 2022-ஆம் ஆண்டு புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பதற்காக நடிகர் ராஜ்கிரணுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக வழங்கியுள்ளார். அதன்பிறகு படத்தின் தயாரிப்புப் பணிகள் எதுவும் தொடங்கப்படாததால், கொடுத்த பணத்தைத் உடனடியாகத் திருப்பிக் கொடுக்குமாறு தயாரிப்பாளர் சரவணன் ராஜ்கிரணிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ராஜ்கிரண் தரப்பிலிருந்து ரூ.10 லட்சம் மட்டும் கடந்த 2025-ஆம் ஆண்டு சரவணனுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

மீதமுள்ள ரூ.40 லட்சத்தைத் தராமல் மோசடி செய்துவிட்டதாகக் கூறி தயாரிப்பாளர் சரவணன் கடந்த 2025 செப்டம்பரில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடிகர் ராஜ்கிரண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க நடிகர் ராஜ்கிரண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "திரைப்படத் தயாரிப்பு சம்பந்தமாக கடந்த 2022ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்பொழுது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு உரிமையியல் சம்பந்தப்பட்ட வழப்பாகும், ஆனால் இதில் வேண்டுமென்றே குற்றவியல் சாயல் பூசப்படுகிறது. தமிழக ரசிகர்களால் அறியப்பட்ட மற்றும் பரீட்சையமான நான், விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தருவேன்; எங்குேயும் தப்பி ஓடிவிட மாட்டேன்" என்று அந்த மனுவில் ராஜ்கிரண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டு நீதிபதி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.