ரூ.4.18 லட்சம் கோடி... ஈரானுக்கு எதிரான போரால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு, உயிரிழப்பு விவரங்கள் வெளியீடு!

 
அமெரிக்கா ஈரான் போர்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு இதுவரை ரூ.4.18 லட்சம் கோடிக்கும் மேல் செலவாகியுள்ளதாகவும், பென்டகன் தரப்பில் வீரர்களின் இழப்பு மற்றும் காயமடைந்தோர் குறித்த விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ள நிலையில், போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட போதிலும் கடந்த 7 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது.

அமெரிக்கா ஈரான்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஈரானுக்கு எதிரான போருக்காக அமெரிக்காவின் மொத்தச் செலவு ரூ.4.18 லட்சம் கோடியாக (43.6 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது.

இதில் ஆயுதங்களுக்கான செலவு மட்டும் ரூ.2.69 லட்சம் கோடியாக (28.1 பில்லியன் டாலர்) உள்ளது. தொடர்ந்து நடந்து வரும் இந்த மோதலின் காரணமாக, மாதம் ஒன்றிற்கு ஏறக்குறைய ரூ.28,780 கோடி (3 பில்லியன் டாலர்) செலவாகிறது. இதில் பெரும்பகுதி நிதி வெடிமருந்துகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

ஈரான் அமெரிக்கா போர்

போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் விமானத் தளங்களை இயக்குவதற்கான செலவுகள், ஆயுதங்களின் இழப்பு மற்றும் படுகாயமடைந்த படைவீரர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இந்தச் செலவுக் கணக்கில் அடங்கும்.

அமெரிக்காவின் பென்டகன் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தப் போரில் அமெரிக்கத் தரப்பில் 18 வீரர்கள் பலியாகியுள்ளனர் மற்றும் 830 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஈரானின் பதிலடித் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கப் படைத் தளங்களின் கட்டடங்களும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.