முதல்வர் விஜய் துறையில் ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு.. ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட அறப்போர் இயக்கம்!

 
விஜய் லஞ்சம் முறைக்கேடு அறப்போர்

முதல்வர் விஜய் துறையில், தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் விதிகளை அப்பட்டமாக மீறி, முன்கூட்டியே பணிகளை முடித்துவிட்டுப் பின் தேதிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகக் கூறி ரூ.45 லட்சம் ஊழல் குற்றச்சாட்டை அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோரப்படும் முன்பே, கூட்டுச்சதி செய்து சம்பந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டுக் கடந்த ஜூலை மாதத்திலேயே அமைச்சர் சரத் அவர்களால் திறப்பு விழாவும் நடத்தப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கான டெண்டர் நடவடிக்கைகள் அதற்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் தான் கோரப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.


புதிய அரசின் கீழ் நேர்மையான நிர்வாகம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ். இது போன்ற டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கம் இன்று முறைப்படி புகார் மனுக்களை அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து, தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ். மீது அரசு தரப்பில் என்ன மாதிரியான நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.