₹4,500 கோடியில் பிரம்மாண்ட மாற்றம்... மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் பறக்கும் ரயில் திட்டம்!

 
பறக்கும் ரயில் பறக்கும் ரயில்

சென்னை மாநகரப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை கடற்கரை - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான கொள்கை அளவிலான இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இதன் மூலம், எதிர்காலத்தில் பறக்கும் ரயில் சேவைகளும் மெட்ரோ ரயிலுக்கு நிகரான அதிநவீன தரத்திற்கு உயரவுள்ளன.

பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுக்கு நிகராக மாற்றி அமைத்து, அதனை மெட்ரோ ரயில் நிர்வாகமே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இடையே தயார் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, சில சிறிய மாறுதல்களுடன் இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த ஒப்பந்தத்திற்கு ரயில்வே வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்க முடிவு செய்துள்ளது.

பறக்கும் ரயில்

ரயில்வே வாரியத்தின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், சுமார் ₹4,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இதற்கான மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கவுள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த முழு வழித்தடத்தையும் மெட்ரோ சேவைக்கு நிகராக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பறக்கும் ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள், பயணிகளின் வசதிக்காகப் புதிய மின்தூக்கிகள் மற்றும் நகரும் மின்படிக்கட்டுகள்  அமைக்கப்படும். சிக்னல் அமைப்புகள் முற்றிலும் நவீனப்படுத்தப்படும். மேலும், எம்ஆர்டிஎஸ்  தண்டவாளங்களுக்குப் பொருந்தும் வகையிலான புதிய மெட்ரோ ரயில் பெட்டிகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு இயக்கப்படும்.

இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும் வரை, பயணிகளின் நலன் கருதி ஏற்கனவே நடைமுறையில் உள்ள தெற்கு ரயில்வேயின் பழைய குறைந்த கட்டண விகிதத்திலேயே ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும். இந்த ஒப்படைப்பு திட்டத்தின் மூலம் மொத்தம் 21 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, மெட்ரோ ரயில் வழித்தடமாக மாற்றப்பட உள்ளன.

மெட்ரோ பறக்கும் ரயில்

சென்னை கடற்கரை, சென்னை கோட்டை, பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், முண்டக்கண்ணி அம்மன் கோவில், திருமயிலை, மந்தவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய 18 நிலையங்கள்.

அதே போன்று வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் (5 கி.மீ) புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய 3 நிலையங்கள்.

மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில் வழித்தடங்கள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதி மக்களின் பயண நேரம் கணிசமாகக் குறைவதோடு, பொதுப் போக்குவரத்துச் சேவை மிகவும் எளிதானதாகவும், உலகத் தரமானதாகவும் மாறும் என்பதால் சென்னைவாசிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.