ரூ.45,000 கோடி இலக்கு... மதுபான விலை உயர்கிறதா? கர்நாடகா முதல்வர் சூசக தகவல்!

 
பீர் டாஸ்மாக் பீர் டாஸ்மாக்

கர்நாடக மாநில பட்ஜெட் மற்றும் அரசின் நிதிநிலை குறித்த விவாதங்களுக்கு இடையே, மதுபானங்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் சித்தராமையா தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

கர்நாடக அரசு தனது வருவாயைப் பெருக்கும் நோக்கில், மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரியை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பீர் மீதான வரி 185 சதவீதத்தில் இருந்து 195 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஒரு பாட்டில் பீரின் விலை 10 முதல் 20 ரூபாய் வரை உயரக்கூடும். இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள், மற்ற மதுபான வகைகளுக்கான வரிகளும் ஸ்லாப் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

சித்தராமையா

இந்த விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்த முதல்வர் சித்தராமையா, மாநிலத்தின் ஐந்தாண்டு இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இதற்காக மதுபானங்கள் மற்றும் முத்திரைத் தாள் கட்டணங்கள் மூலம் வருவாயை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவோடு ஒப்பிடுகையில், கர்நாடகாவில் மதுபான விலை இன்னும் குறைவாகவே இருப்பதாகவும், எனவே இந்தச் சிறிய உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் மது

கடந்த நிதியாண்டில் கலால் துறை மூலம் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை விடக் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாகவும், இந்த ஆண்டும் இலக்கை எட்ட இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு மதுபான விற்பனையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலையை உயர்த்தினால் சட்டவிரோத மது விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த விலை உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமலுக்கு வந்தால், கர்நாடகாவில் மதுபானங்களின் விலை அண்டை மாநிலங்களுக்கு இணையாக உயரும்.