ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம் - ரூ.5.13 கோடி அபராதம் விதிப்பு!

 
உணவு

இந்தியாவில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையலறைகளின் சுகாதாரம் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிப்பு போன்ற புகார்கள் மீது ரயில்வே நிர்வாகம் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்த் ஹாண்டோரே எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த அபராத நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு ரயில்

இந்திய ரயில்வேயில் ஆண்டுக்கு சராசரியாக 58 கோடி உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும் நிலையில், உணவின் தரம் குறித்த புகார்களின் அளவு வெறும் 0.0008% மட்டுமே என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் தரமற்ற உணவு, குறைந்த அளவு, அதிகக் கட்டணம் வசூல் மற்றும் சுகாதாரமற்ற சமையல் பெட்டிகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டதோடு, சில நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு அவற்றுக்குக் கருப்புப் பட்டியலும் வைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே உணவுத் தயாரிப்பு மையங்களில் நேரலை கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதல் கட்டணப் புகார்களைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ரயில்வே சமையல் பெட்டிகளில் பி.ஓ.எஸ் இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் பெறும் வசதி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.