தொடக்கத்தில் ரூ.6 லட்சம் கோடி ஆவியானது - பங்குச்சந்தையில் கடும் சரிவால் முதலீட்டாளர்கள் கதறல்!

 
பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் தங்களின் சொத்து மதிப்பை இழந்து நஷ்டத்தில் கதறியுள்ளனர்.

உலகளாவிய பங்குச்சந்தைகளின் பலவீனமான கட்டமைப்பு மற்றும் தொடர் தாக்கங்களால், மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் வர்த்தகத் தொடக்கத்தில் 740 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 74,160 என்ற புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 250 புள்ளிகள் வரை சரிந்து 23,231 என்ற குறைந்தபட்ச உச்சிக்குச் சென்றது.

வீழ்ச்சி ஷேர் பங்குச்சந்தை

வர்த்தகம் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் பேரிடி விழுந்தது. பிஎஸ்இ நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பானது முந்தைய அமர்வில் ரூ. 484 லட்சம் கோடியாக இருந்த நிலையில், ஒரே அடியாகக் குறைந்து ரூ. 478 லட்சம் கோடியானது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் சுமார் ரூ. 6 லட்சம் கோடி கண் இமைக்கும் நேரத்தில் ஆவியாகி பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

நடுத்தர மற்றும் சிறு நிறுவனப் பங்குகள் 1.5 சதவீதம் வரை கடுமையாகச் சரிந்ததால், சில்லறை முதலீட்டாளர்கள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயினர்.

ஷேர் இறக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 108 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது. இது இந்தியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் லாபத்தைப் பாதிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் பணவீக்கத் தரவுகள் அதிகரித்துள்ளதால், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. இதனால் அமெரிக்கப் பத்திரங்களின் ஈவுத்தொகை 4.98 சதவீதமாக உயர்ந்ததுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளைத் தீவிரமாக வெளியேற்றத் தொடங்கியுள்ளனர்.