ரூ6000 உதவித்தொகை நிவாரணத் தொகை டோக்கன் எப்போது?!

 
ரேஷன்

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை நின்று சுமார் ஐந்து நாள்களாகியும் பல இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவில்லை. இந்த சூழலில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

அதில் எம்.எல்.ஏக்களிடம் சில விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அதாவது, நிவாரணம் என்பது குறைந்தது 3,000 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். அதுவும் விரைவாக அறிவித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் மக்களை சந்திக்க முடியும். ஏற்கனவே வெள்ள சேதங்களால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக வந்து சந்திக்கவில்லை என்று பலரும் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

ரேஷன்

எனவே நிவாரணம் என்ற விஷயம் தான் ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருக்கும் என்று வலியுறுத்தினர். இதை கேட்டுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 6,000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனால் மக்கள் மத்தியில் சலசலப்பு சற்றே ஓய்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 6,000 ரூபாய் நிவாரணம் எப்படி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைகளை அடிப்படையாக கொண்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எப்படி பொங்கல் பரிசிற்கு டோக்கன் முறையில் ரொக்கமும், பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதோ அதே முறையில் வழங்க ஆலோசித்து வருகின்றனர். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்னும் ஒருவாரத்தில் வெள்ள நிவாரணம் அனைவரது கைகளுக்கும் போய் சேர்ந்துவிடும் என்று தெரிவித்தார்.

இதை உறுதி செய்யும் வகையில் பேசிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று வெளியாகும் அரசாணையில் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற தெளிவான விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்றார்.

வெள்ளம்

முன்னதாக திருவொற்றியூர் பகுதியில் நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். இப்பகுதிகளில் பெட்ரோலிய தொழிற்சாலைகள் இருக்கின்றன. பெட்ரோல் தயாரிப்பிற்கு கச்சா எண்ணெய் தான் மூலப்பொருள். இது சேகரித்து வைக்கப்பட்ட கிடங்குகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நீரில் கலந்து வெளியேறியுள்ளன. இது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சூழ்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இங்கெல்லாம் மீட்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தலைமை செயலாளர் ஆய்வு செய்து விட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் நீரில் கச்சா எண்ணெய் கலந்து பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் உரிய ஆய்வு செய்து அறிக்கை அளிப்பர். ஏற்கனவே பொது நிவாரணமாக 6,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. இதனுடன் கூடுதலாக உதவிகள் வழங்க வேண்டுமா? என்பது பற்றி ஆராய்ந்து முடிவு செய்யப்படும் என்று சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்

From around the web