சென்னையில் ஒரே நாளில் ரூ.7.65 லட்சம் அபராதம் வசூல்.. 8,704 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு!
சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் 'விதிமீறல் அற்ற நாள்' கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து, ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகரம் முழுவதும் நேற்று அக்டோபர் 31ம் தேதி பெருநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் 'விதிமீறல் அற்ற நாள்' கடைப்பிடிக்கப்பட்டுத் தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாதது, சிக்னலை மீறியது மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரே நாளில் 8,704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடமிருந்து ஒரே நாளில் மொத்தம் ரூ.7.65 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டதாகச் சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

வீதி விபத்துகளைத் தவிர்க்கவும், பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதுபோன்ற அதிரடிச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனப் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
