ரூ.800 கோடி நிதி நிறுவன மோசடி: மதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு!
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மதுரை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் திரண்டு புகார் மனு அளித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2006-ஆம் ஆண்டு டிஸ்க் அசெட்ஸ் லீடு இந்தியா லிமிடெட், டால் மார்க்கெட்டிங் சொலிசன் லிமிடெட், ஐயன் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 34 துணை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வந்தன. இவற்றை உமா சங்கர் ஜனார்த்தனன், அருண்குமார், சரவணகுமார் மற்றும் அவர்களது உறவினர்கள் நடத்தி வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, கோவை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்த நிறுவனங்களில் தங்களது சேமிப்புகளைத் தொடங்கியுள்ளனர். 5 ஆண்டுகளில் 12.5 சதவீத வட்டியுடன் முதலீட்டுத் தொகை சேர்த்துத் திருப்பத் தரப்படும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி மக்களிடம் இருந்து சுமார் ரூ.1,137 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 5 லட்சம் சேமிப்பாளர்களுக்கும் மேல் ரூ.400 கோடி வரை மட்டுமே திருப்பி வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள சுமார் 8 லட்சம் பேருக்கு வழங்க வேண்டிய ரூ.800 கோடிக்கும் அதிகமான தொகையை நிறுவனங்கள் வழங்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை விரைந்து பட்டுவாடா செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும், தங்களுக்குச் சேர வேண்டிய முதலீட்டுத் தொகை நீண்ட காலமாகியும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கானோர், நேற்று காலை மதுரை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸ் அலுவலகம் முன்பு திரண்டனர். தாங்கள் இழந்த பணத்தை விரைந்து மீட்டுத் தருமாறு கோரி அவர்கள் காவல் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
