₹83 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி முறைகேடு - கூட்டுறவு சங்கச் செயலாளர் பணியிடை நீக்கம்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததில் ₹83 லட்சத்திற்கும் மேல் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஓய்வுபெற இருந்த சங்கச் செயலாளரைப் பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராகப் பணியாற்றி வந்தவர் சண்முகவேலு. இவர் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதியன்று வயது முதிர்வு காரணமாகப் பணி ஓய்வு பெற இருந்தார்.
அவரது பணி ஓய்வையொட்டி, வி.அம்மாபட்டி சங்கத்தின் கணக்குகள் மற்றும் அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நாகையகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கணக்குகளைப் பொதுப்பணி நிலைத்திறன் அடிப்படையில் சரிபார்க்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் வட்டார கள அலுவலர், எரியோடு சரக மேற்பார்வையாளர், வடமதுரை கள மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இரு சங்கங்களின் கணக்குகளையும் தீவிரமாகத் தணிக்கை செய்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, கடந்த 2021-ஆம் ஆண்டில் இரு சங்கங்களிலும் சேர்த்து மொத்தம் 55 விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கோப்புகளில், சுமார் ₹83 லட்சத்து 13 ஆயிரத்து 342 வரை முறைகேடு செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இம்முறைகேடு தொடர்பான தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்த அதிகாரிகள், அதனை உடனடியாகப் பழனி கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் கனகராஜிடம் சமர்ப்பித்தனர். அவர் மேல் நடவடிக்கைக்காக இந்த அறிக்கையைத் திண்டுக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜிக்கு அனுப்பி வைத்தார்.

இணைப் பதிவாளர் ஸ்ரீ ராகவ் பாலாஜி நடத்திய முதற்கட்ட விசாரணையில், பயிர்க்கடன் தள்ளுபடியில் சண்முகவேலு முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற இருந்த சண்முகவேலுவை அரசுப் பலன்களைப் பெற அனுமதிக்காமல், அவரைப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து இணைப் பதிவாளர் உத்தரவிட்டார். ஓய்வு பெறும் நாளில் கூட்டுறவு சங்கச் செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
