ரூ.9.27 கோடி ஒதுக்கீடு - இன்று 61.84 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள்... குழந்தைகள் தின கொண்டாட்டம்!

 
கேக்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆணைக்கிணங்க, குழந்தைகள் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 61,84,566 பேருக்கு இன்று கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட 61,84,566 குழந்தைகளுக்கு இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் கேக்குகள் வழங்கப்படுகின்றன. இதற்காகத் தமிழக அரசால் ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கேக்குகளுடன் இணைந்து அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பிரத்யேகக் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளும் வழங்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய அரசுத் தரப்பில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

கேக்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 4 முன்னணிப் பெருநிறுவனங்கள் வாயிலாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தரத்திலுள்ள கேக்குகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்முதல் செய்யப்பட்ட கேக்குகளின் மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரக அதிகாரிகளால் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுத் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கேக்குகள் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்கப் பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

கேக்

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் ஆகியோர் இணைந்து, கேக்குகள் வைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கூடங்கள் மற்றும் பள்ளிகளில் எலிகள், பூச்சிகள் போன்றவை இல்லாத வகையில் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்படுகிறதா என்பதை நேரடியாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கேக்குகள் முறையாக வழங்கப்படுவதை நேரில் கண்காணிக்க உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று பள்ளி மாணவர்களுக்கு நேரில் கேக்குகள் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவிக்க உள்ளார்.