ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்... மருத்துவ மாணவர் கைது... தொடரும் விசாரணை!
மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அத்தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சுபம் கெர்னர் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டெலிகிராம் செயலி மூலமாக ₹10 லட்சத்திற்கு வினாத்தாளைப் பெற்றதாக விசாரணையில் அம்பலமானதால், இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி எப்படி நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வினாத்தாளைக் கசியவிட்ட நபர்கள் யார், அவர்களுக்குப் பின்னால் உள்ள நெட்வொர்க் எது என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தேர்வை நம்பி இருந்த லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி, ரத்து செய்யப்பட்ட நீட் தேர்விற்குப் பதில் மறுதேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இதற்கான தேர்வு தேதி மற்றும் கால அட்டவணை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முறைகேடுகளைத் தடுக்க வரும் காலங்களில் தேர்வு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
