ரயில் தீப்பிடித்ததாகப் பரவிய வதந்தி... பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
மத்தியப் பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில், தாங்கள் பயணித்த ரயிலில் தீப் பிடித்து விட்டதாகப் பரவிய வதந்தியை நம்பி தண்டவாளத்தில் குதித்த பயணிகள், எதிரே வந்த மற்றொரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவத்தில் பலி எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மொரீனா மாவட்ட எல்லைப் பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த போது, ரயிலின் ஒரு பெட்டியில் திடீரெனத் தீப்பிடித்துவிட்டதாகப் பயங்கர வதந்தி பரவியுள்ளது. இதனால் ரயிலுக்குள் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்து, அலறியடித்துக் கூச்சலிட்டுள்ளனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்ட சூழலில், உயிருக்குப் பயந்த பயணிகள் அவசர அவசரமாக ரயிலில் இருந்து கீழே குதித்துத் தண்டவாளப் பகுதியில் தப்பியோட முயன்றனர்.

பயணிகள் பதற்றத்துடன் தண்டவாளத்தில் இறங்கி ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக எதிரே உள்ள தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்தக் கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்து நடந்த தொடக்கக் கட்டத்தில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், படுகாயமடைந்த பல பயணிகள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
