விலை உயர்விலும் தங்கம் வாங்க அலைமோதும் கூட்டம்... அக்க்ஷய திருதியை முன்னிட்டு களைகட்டிய விற்பனை!

 
தங்கம் தங்கம்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ள நிலையிலும், அக்ஷய திருதியை நன்னாளையொட்டி சென்னையில் நேற்று பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கம் வாங்க நகைக்கடைகளில் குவிந்தனர். சென்னையில்  22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலையேற்றத்தைப் பொருட்படுத்தாமல், சுப காரியங்களுக்காகவும், சேமிப்பிற்காகவும் மக்கள் காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கிச் சென்றனர்.

தங்கம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதாரச் சூழல்களால் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இருப்பினும், அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையால், பெரும்பாலான மக்கள் சிறிய அளவிலான நாணயங்கள் அல்லது குறைந்த எடை கொண்ட ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். நகைக்கடைகளும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் செய்கூலி தள்ளுபடி மற்றும் முன்பதிவு திட்டங்களை அறிவித்திருந்தன.

தங்கம்

சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பாதுகாப்புப் பணிகளுக்காகக் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு வரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒருபுறம் விலை உயர்வால் நகைகளின் விற்பனை அளவு கடந்த ஆண்டை விடக் குறைந்திருப்பதாகக் கூறப்பட்டாலும், வர்த்தக மதிப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு விற்பனை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என நகை வியாபாரிகள் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.