உக்ரைனில் நிவாரண மையம் மீது ரஷியா வான்வழித் தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு!

 
உக்ரைன்

 

உக்ரைனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஜபோரிஜியா மாகாணத்தில் ரஷியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொமிஷுவாகா கிராமத்தில் உள்ள பள்ளிக் கட்டிடம், அப்பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கும் மையமாகவும், பாதுகாப்பு தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த இடத்தில் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறவில்லை. திங்கட்கிழமை தோறும் அப்பகுதி மக்கள் அங்கு வந்து நிவாரணப் பொருட்களைப் பெற்றுச் செல்வது வழக்கம்.

இந்த மையத்தைக் குறிவைத்து ரஷியப் படைகள் அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தாக்குதலில் மீட்புப் பணியாளர்கள் இருவர், போலீசார் நால்வர் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. மேலும், ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. 27 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.