ரஷிய ராணுவத்தில் இணைந்த இந்தியர்களில் 51 பேர் பலி!
ரஷிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 51 பேர் போரில் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் போரின் பின்னணியில், சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக ரஷிய ராணுவத்தில் மொத்தம் 227 இந்தியர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களில் துரதிர்ஷ்டவசமாக 51 இந்தியர்கள் போர்க்களத்தில் உயிரிழந்துவிட்டதாக அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையே, இந்திய அரசின் தீவிர முயற்சிகள் காரணமாக இதுவரை 139 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ளனர்.

ரஷிய ராணுவத்தில் இன்னும் சிக்கியிருக்கும் எஞ்சிய இந்தியர்களை விரைவாக விடுவித்து, அவர்களைப் பத்திரமாக மீட்க மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிரமாகப் பேசி வருகிறது. மேலும், போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு ஆபத்து நிறைந்த வெளிநாட்டு வேலைகளில் சேர்வதை இந்தியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
