ஐ.நா. கறுப்புப் பட்டியலில் இடம்பெற்ற ரஷ்யா, இஸ்ரேல் படைகள்!
சூடான், ஹைட்டி, காங்கோ மற்றும் மியான்மர் போன்ற உலகின் பல்வேறு மோதல் நிலவும் பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தற்போது மிகக் கடுமையான அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, சர்வதேச விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகக் கூறி ரஷ்யா மற்றும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புப் படைகளை ஐ.நா. சபை தனது அதிகாரப்பூர்வ 'கறுப்புப் பட்டியலில்' சேர்த்துள்ளது உலக அரங்கில் மிகப்பெரிய ராஜதந்திர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்படவுள்ள வருடாந்திர அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூடான் உள்நாட்டுப் போர், ஹைட்டி வன்முறைகள், காங்கோ மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மோதல்களின் போது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், துஷ்பிரயோகம் மற்றும் மனிதநேயமற்ற அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அந்தந்த நாட்டுப் படைகள் மீது கடுமையான புகார்கள் ஆதாரங்களுடன் எழுந்தன.

இந்த மோதல் பகுதிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உத்திகளை வகுத்து, இத்தகைய அத்துமீறல்களுக்குக் காரணமாக இருந்ததாகக் கூறியே ரஷ்ய மற்றும் இஸ்ரேலியப் படைகள் தற்பொழுது ஐ.நா.வின் கறுப்புப் பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கறுப்புப் பட்டியல் நடைமுறைக்கு வந்த கடந்த 15 ஆண்டு கால வரலாற்றில், இஸ்ரேல் நாட்டின் ராணுவப் படை இதில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தின் போதே, சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று, இந்த இரு நாடுகளின் படைகளும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் அதிகாரப்பூர்வமாக எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பு மற்றும் போர் விதிகளுக்கு மாறாகச் செயல்படும் நாடுகளை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்படும் இந்த ஐ.நா. கறுப்புப் பட்டியலில், தற்போது ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு வல்லரசு நாடுகளின் படைகளும் ஒரே நேரத்தில் இடம்பெற்றிருப்பது, அந்த நாடுகளுக்குச் சர்வதேச இராஜதந்திர ரீதியிலும், வெளியுறவுக் கொள்கைகளிலும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
