ரஷ்யாவில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை உள்ளதா?
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (அக். 16) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுனாமி அச்சுறுத்தல் உள்ளதா?
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அபாயம் குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை, கண்காணிப்பு அல்லது அபாய அறிவிப்பு எதுவும் தற்போது அமலில் இல்லை.

நிலநடுக்கத்தின் தீவிரம் குறித்து ஆய்வு மையங்களின் மதிப்பீடுகளில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் 7.0 எனவும், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் 6.9 எனவும் மதிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
